இந்தியா

பிரதமர் மோடி கூறிய ரோடியோலா மூலிகை: கவனத்தை திருப்பிய ஆராய்ச்சியாளர்கள்!

பிரதமர் மோடி கூறிய ரோடியோலா மூலிகை: கவனத்தை திருப்பிய ஆராய்ச்சியாளர்கள்!

webteam

பிரதமர் மோடி சுட்டிக்காட்டிய ரோடியோலா மூலிகையை அதிகளவில் பயிரிட மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக கடந்த மாதம் 8ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு மூலிகைச்செடி குறித்தும் பேசினார். அதில், '' காஷ்மீரின் லடாக் பகுதியில் ரோடியோலா என்ற மூலிகை வளர்கிறது. மருத்துவக் குணங்கள் பல நிறைந்த இந்த மூலிகையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்’’ என்றும் தெரிவித்தார். 

இதனை அடுத்து லடாக் பகுதியில் செயல்படும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் மூலிகை வளர்ப்பு குறித்து திட்டமிட்டுள்ளது. அதன்படி தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் லடாக் பகுதி விவசாயிகள் ரோடியோலா மூலிகையை பயிரிட ஊக்கம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்மட்டத்தில் இருண்டு 18ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கில் மட்டுமே ரோடியோலா மூலிகை வளர்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி, கதிர் வீச்சு பாதுகாப்பு , நினைவாற்றலை மீட்பது, சில வகை புற்றுநோய்க்கும் மருந்து என ரோடியோலாவின் மருத்துவப்பலன்கள் அதிகமானவை என கூறப்படுகிறது.  

மேலும் ஆக்சிஜன் குறைவாக உள்ள மலைப்பகுதிகளில் ரோடியோலா முக்கிய மூலிகையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பேசும் உள்ளூர் சித்த மருத்துவர்கள், ராமாயணத்தில் அனுமன் கொண்டு வந்ததாகக் கூறப்படும் சஞ்சீவி மூலிகையானது, ரோடியோலா தான் என தெரிவிக்கின்றனர்.