உலகின் மிகப்பெரிய தாற்காலிக நகரம் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தாற்காலிக நகரத்தில் தான் இந்த ஆண்டின் கும்பமேளா நடைபெறுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பூர்ண கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசேஷ தினங்களில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டிவர். இதனால் இந்த கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜில் நாக சாதுக்கள் குவிந்து வருகின்றனர்.
சனாதன தர்மம் எனப்படும் நிலையான தத்துவஞானத்தை பின்பற்றும் இந்துக்களின் புனித விழா மகா கும்பமேளா. திரிவேணி சங்கம்மான கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறும் கூடும் பிரயாக்ராஜில் ஜனவரி15ஆம் தேதி தொடங்குகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 12 மகா கும்பமேளா முடிவடைந்ததும், அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூரண கும்பமேளா கொண்டாடப்பட்டு வருகிறது. திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீறு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்தபடி நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் 'ஹர ஹர மகாதேவா…' என்று மந்திர உச்சாடனம் செய்தபடி ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவதே இந்த மகா கும்பமேளாவின் விஷேசம்.
கோடிக்கணக்கான சாதுக்களும், பக்தர்களும் கூடும் இந்த கும்பமேளாவில் 48 நாட்களும் நீராடுவது சிறப்புதான். எனினும், சில நாட்கள் முக்கியமான நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் ஜனவரி மாதத்தில் வரும் மகரசங்கராந்தி, தை மாத பௌர்ணமி, ஏகாதசி, அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்த தினங்களாகும். அதேபோல் பிப்ரவரியில் வரும் கும்பசங்ராந்தி, வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மகாபூர்ணிமா, மகாசிவராத்திரி ஆகிய நாட்களும் நீராடுவதற்கு விசேஷ தினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிவேணி சங்கமத்தில் பூர்ண கும்பமேளாவில் குளிப்பது மட்டுமே நிகழ்வல்ல. தினம் தினம் மந்திர உச்சாடனம், சாதுக்களின் ஜெபம், ஹோமம், நடனம், பிரார்த்தனை என கும்பமேளா நிகழ்வுகளே ஒருவித தெய்வீக தன்மையுடன் காட்சியளிக்கும்.