இந்தியா

ஊரடங்கில் தடபுடலாக நடந்த கர்நாடக முன்னாள் முதல்வர் மகனின் திருமணம்

ஊரடங்கில் தடபுடலாக நடந்த கர்நாடக முன்னாள் முதல்வர் மகனின் திருமணம்

webteam

ஊரடங்கு உத்தரவை மீறி தடபுடலாக நடந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியின் மகன் திருமணம்.


நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூட சட்ட ரீதியாக போடப்பட்ட தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவுக்கு இடையே கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் திட்டமிட்டப்படி நடைபெற்றுள்ளது. ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வீட்டுவசதி துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

பெங்களூருக்கு வெளியே ராமநகரில் உள்ள ஆடம்பரமான பண்ணை வீட்டில் , இந்தத் திருமணம் நடத்தப்பட்டது. பெங்களூருவிலிருந்து சுமார் 40 வாகனங்களில் இந்த நிகழ்ச்சிக்காக இரு வீட்டாரும் இந்தப் பண்ணை வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் வருவதைக் காட்சிப் படுத்தக்கூடாது என்பதற்காக ஊடகங்கள் ராமநகர மாவட்டத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், எந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என முன்கூட்டியே அதன் பதிவு எண்களை இரு வீட்டார் சார்பில் வழங்கிவிட்டதாகவும் வேறு எண் கொண்ட வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இது போன்ற திருமண நிகழ்வுகளுக்கு நாடு முழுவதும் தடை போடப்பட்டுள்ளது. கூட்டமாக ஒரே இடத்தில் அளவுக்கு மீறி மக்கள் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து குமாரசாமியைக் கேட்டதற்கு அவர், “அரசிடம் இருந்து அனைத்துவிதமான முன் அனுமதியையும் நாங்கள் பெற்றுள்ளோம்” எனக் கூறியிருந்தார்.

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா அரசு, இந்தத் திருமணத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், அரசு தரப்பில் இந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறியிருந்தது. மாநில அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முழு திருமண நிகழ்வையும் படமாக்கும்படி கேட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயா தெரிவித்துள்ளார்.

இதனிடையே “சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.