இந்தியா

“குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் அழுத்தம் தருகிறது”-வெளியுறவுத் துறை தகவல்

“குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் அழுத்தம் தருகிறது”-வெளியுறவுத் துறை தகவல்

webteam

பாகிஸ்தானின் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள குல்பூஷண் ஜாதவிற்கு அழுத்தம் தரப்படுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் இந்தியக் கப்பல்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து உளவு பார்த்தது மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்தது. 

இதை எதிர்த்து மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஜாதவை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் இன்று சந்திக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் இந்திய தூதர அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை இன்று சந்தித்தனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “குல்பூஷண் ஜாதவ் மிகவும் அழுத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன்  பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் தந்துள்ளனர். இந்தச் சந்திப்பின் முழு சாரம்சம் இன்னும் தெரியவில்லை. எனினும் குல்பூஷண் ஜாதவிற்கு விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.