இந்தியா

கேரள விமான விபத்து: ஆபத்தான உரையாடல்கள் இடம்பெறவில்லை - விமானத்துறை அதிகாரி தகவல்

கேரள விமான விபத்து: ஆபத்தான உரையாடல்கள் இடம்பெறவில்லை - விமானத்துறை அதிகாரி தகவல்

webteam

கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் விமானிகளுக்கும் இடையே எந்த வித ஆபத்தான உரையாடல்களும் நடைபெறவில்லை என விமானத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமானத்துறை அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேசியுள்ளார். அதில் அவர் கூறும் போது “ விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானம் தரையிறங்குவதற்குத் தேவையான தரைத்தளம் குறித்த நிலவரம், காற்றின் வேகம், தெரிவு நிலை ( பார்க்கும் நிலை) உள்ளிட்ட விவரங்கள் விமானிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பெற்றுக்கொண்ட விமானியும் அதனை ஆமோதித்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

விபத்தில் மீட்கப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டியும், சிவிஆர் கருவியும் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் குறைந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஆச்சர்யம் அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது “ 18 நபர்கள் உயிரிழந்தது ஒரு சோகச்சம்பவம். விமானம் தரைத்தளத்தில் மோதி 3 துண்டுகளாக உடைந்தது. ஆனால் விபத்தில் குறைந்த அளவிலான உயிரிழப்புகள் நடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது" என்று கூறினார்.

குறைந்த அளவிலான உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கான காரணத்தை இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது “ முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
உள்ளூர்வாசிகள் உடனடியாக வந்து விமானத்தில் இருந்த பயணிகளை மீட்டது, தீயணைப்புத்துறை விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து, விமானப் பகுதிகளை அகற்றி பயணிகளை வெளிக்கொண்டு வந்தது போன்றவைதான் 200 சதவீதம் குறைவான உயிரிழப்புகள் நிகழ்ந்ததற்கு காரணம்” என்றார்.