இந்தியா

அமைச்சர் அல்போன்ஸ் நாளை சபரிமலைக்கு வருகை

அமைச்சர் அல்போன்ஸ் நாளை சபரிமலைக்கு வருகை

webteam

யாத்ரீகர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் நாளை
சபரிமலைக்கு வருகை புரிகிறார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு
வழங்கியது. ஆனால் இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவிற்காக நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு நடை
திறக்கப்பட்டது. 42 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜையில் பக்தர்கள் கலைந்து கொண்டு தரிசனம் பெறலாம். 

இதன் இடைப்பட்ட காலங்களில் இளம்பெண்கள் கோயிலுக்கு வரும்போது போராட்டம் நடத்துவதற்கு சிலர் கோயிலுக்குள் வர
வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படாத
நிலையில், நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து கடந்த
வெள்ளிக்கிழமை இந்து ஐக்கிய வேதி தலைவி கே.பி.சசிகலா தடையை மீறி சபரிமலையில் இருமுடி கட்டிக்கொண்டு செல்ல
முயன்றார். இதனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றவே அவர்
கைது செய்யப்பட்டார். 

பின்னர், சனிக்கிழமை திருவல்லா துணை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனிடையே சபரிமலை செல்லும்
வழியில் சாலையை அடைத்து போராட்டம் நடத்திய பாஜவை சேர்ந்த சுந்தரன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுந்தரத்தை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், யாத்ரீகர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் நாளை
சபரிமலைக்கு வருகை புரிகிறார்.

இந்த கைது நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில் இது முற்றிலும் தேவையற்ற ஜனநாயகமுறையற்ற ஒன்று என
தெரிவித்துள்ளார்.