இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் படால் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் நாளை நவம்பர் 3-ம் தேதி உணவு கருத்தரங்கு தொடங்குகிறது. இக்கருத்தரங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்திய உணவுத் துறை பங்கேற்று நடத்தும் இந்த விழாவில், 4-ம் தேதி மாலை, உலக சாதனையில் இடம்பெறும் வகையில் சுமார் 800 கிலோ கிச்சடி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 8 அடி விட்டமுள்ள பெரிய பாத்திரமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிச்சடியை தேசிய உணவாக மத்திய அரசு அறிவிக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் படால் ட்விட்டரில் பதிவுட்டுள்ளார். தனது ட்விட்டரில், கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கவில்லை. உலக உணவு கருத்தரங்குக்காக அதிக அளவில் கிச்சடி செய்ய உள்ளோம் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.