இந்தியா

தொழிலாளர் தலைவர் டூ காங்கிரஸ் தலைவர்! மல்லிகார்ஜுன கார்கேவின் 53 ஆண்டு கால நெடும்பயணம்!

தொழிலாளர் தலைவர் டூ காங்கிரஸ் தலைவர்! மல்லிகார்ஜுன கார்கேவின் 53 ஆண்டு கால நெடும்பயணம்!

ச. முத்துகிருஷ்ணன்

1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் சேவையாற்றத் துவங்கிய மாபண்ண மல்லிகார்ஜுன கார்கே 53 ஆண்டு கால நெடும்பயணத்திற்கு பின்னர் அக்கட்சியின் அகில இந்திய தலைவராக உருவெடுத்துள்ளார். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் இதோ..!

1. தொழிலாளர் தலைவராக துவங்கிய அரசியல் பயணம்:

குல்பர்காவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் மல்லிகார்ஜுன கார்கே. 1969 ஆம் ஆண்டு MSK மில்ஸ் ஊழியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக கார்கே பணியாற்றினார். சம்யுக்தா மஜ்தூர் சங்கத்தின் செல்வாக்குமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் பல போராட்டங்களை வழிநடத்துபவராகவும் கார்கே அறியப்பட்டார்.

2. 1969இல் காங்கிரஸில் ஐக்கியம்:

1969 ஆம் ஆண்டு மல்லிகார்ஜுன கார்கே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின் குல்பர்கா நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் குர்மித்கல் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக உருவெடுத்தார்.

3. ஆக்ட்ரோய் வரிக்கு முடிவு கட்டியவர்:

1973 ஆம் ஆண்டு மல்லிகார்ஜுன கார்கே ஆக்ட்ரோய் ஒழிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆக்ட்ரோய் என்பது ஒரு மாவட்டத்தில் நுகர்வுக்காக கொண்டு வரப்படும் பல்வேறு பொருட்களின் மீது வசூலிக்கப்படும் உள்ளூர் வரி ஆகும். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போதைய கர்நாடக அரசு பல இடங்களில் ஆக்ட்ராய் வரியை ரத்து செய்தது. இந்த வரியை நீக்கும் நடவடிக்கை கர்நாடகா மாநிலத்தில் உள்ள நகராட்சி மற்றும் குடிமை அமைப்புகளின் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வழிவகுத்தது.

4.16 ஆயிரம் எஸ்சி/எஸ்டி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி சாதனை படைத்தார்:

1976 ஆம் ஆண்டில், மல்லிகார்ஜுன கார்கே தொடக்கக் கல்விக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்சி/எஸ்டி ஆசிரியர்களின் பின்னடைவு காலிப் பணியிடங்கள் நேரடியாக சேவையில் சேர்த்துக் கொண்டு நிரப்பப்பட்டன. இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் முதன்முறையாக எஸ்சி/எஸ்டி நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உதவித்தொகை குறியீட்டின் கீழ் மானியங்கள் வழங்கப்பட்டன.

5. மில்லியன் கணக்கான நிலம் இல்லாத உழவர்களுக்கு குடியிருப்பு உரிமை:

1980 ஆம் ஆண்டு குண்டுராவ் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சரானார் கார்கே. இந்த காலகட்டத்தில் பயனுள்ள நில சீர்திருத்த நடவடிக்கைகளில் கர்நாடக அரசு கவனம் செலுத்தியது. இதன் விளைவாக மில்லியன் கணக்கான நிலம் இல்லாத உழவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உரிமை வழங்கப்பட்டது. உழவர்களுக்கான நில உரிமைகளை விரைவாக மாற்றுவதற்காக 400 க்கும் மேற்பட்ட நில தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.

1990 ஆம் ஆண்டில், கார்கே பங்காரப்பாவின் அமைச்சரவையில் வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பொறுப்பேற்றார். இடைக்காலத்தில் நிறுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தப் பணியை மீண்டும் துவங்கப்பட்டதன் மூலம், நிலமற்ற உழவர்களின் பெயரில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டன.

6. வீரப்பன் ராஜ்குமாரை கடத்திய விவகாரத்தை திறம்பட கையாண்டார்:

1999 ஆம் ஆண்டில் எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சரவையில் கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் பொறுப்பை வகித்த கார்கே, தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் என இரு மாநிலங்கள் இடையே புயலைக் கிளப்பிய காவிரி கலவரம் மற்றும் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தை திறம்பட கையாண்டார்.

7. தொடர்ந்து ஒன்பது சட்டமன்ற தேர்தலில் தோல்வியே காணாதவர்:

இதுவரை இல்லாத வகையில் 9 முறை (1972, 1978, 1983, 1985, 1989, 1994, 1999, 2004, 2008) சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் கார்கே. முதல் 8 முறை குர்மித்க்ல் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 2008 ஆம் ஆண்டு மட்டும் சித்தர்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

8. நாடாளுமன்றத்தில் கார்கேவின் பணி:

2009 மற்றும் 2014 ஆம் ஆண்டில் குல்பர்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார் கார்கே. மன்மோகன் சிங் அரசில் ரயில்வே அமைச்சராகவும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் இருந்தார். 2014-2019 காலகட்டத்தில், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.

9. பொன்விழா ஆண்டில் முதல் தோல்வி:

அரசியலில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழாவில் திளைத்திருந்த கார்கேவுக்கு அந்த ஆண்டில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குல்பர்கா தொகுதியில் போட்டியிட்ட கார்கே முதன்முறையாக தோல்வியை தழுவினார். இருப்பினும் அவரது இருப்பை தக்கவைக்க எண்ணிய காங்கிரஸ் கட்சி அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அதன்பின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆக்கியது. பிப்ரவரி 16, 2021 முதல் அக்டோபர் 1 2022 வரை, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக கார்கே இருந்தார்.

10. கால் நூற்றாண்டுக்கு பின்னர் காந்தியல்லாத ஒரு தலைவரை காணும் காங்கிரஸ் கட்சி:

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே, ஆங்கிலப் புலமையில் புகழ்பெற்ற சசிதரூரை வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு எண்ணிக்கையில் வீழ்த்தி தலைவர் பதவியை தனதாக்கினார். இதன் மூலம் 24 ஆண்டுகளில் காந்தி அல்லாத தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. 80 வயதான மல்லிகார்ஜுன கார்கே, ஜக்ஜீவன் ராமுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் இரண்டாவது பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்கே காங்கிரஸ் கட்சியை கரை சேர்ப்பாரா? மீண்டும் புத்தொளி பாய்ச்சி அரியணை நோக்கி அக்கட்சியை நகர்த்துவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.