இந்தியா

காலையில் வேலை.. மதியம் சேவை.. ரத்த கொடையாளர்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் ஷாஜஹான்!

காலையில் வேலை.. மதியம் சேவை.. ரத்த கொடையாளர்களை தேடித்தேடி கண்டுபிடிக்கும் ஷாஜஹான்!

webteam

கேரளத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  ரத்தம் கொடுக்கும் கொடையாளர்களைக் கண்டறியும் பணிக்கு தினமும் அரை நாளை ஒதுக்குகிறார் காய்கறி விற்கும் ஷாஜஹான். அவருக்கு மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிகின்றன இதுபற்றி திநியூஸ்மினிட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரத்தம் கொடுக்க கியூவில் நின்றுகொண்டிருந்த ஷாஜஹான், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார். ரத்தம் தேவைப்படும் நோயுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்தனர். யார் ரத்தம் கொடுப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

இப்படியொரு அனுபவம் ஷாஜஹானுக்கும் சிறு வயதில் நேர்ந்தது. குழந்தையாக இருந்தபோது அவரது தாய் புற்றுநோயால் உயிரிழந்தார். அதனால் இன்று ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்தக் கொடையாளர்களைக் கண்டறிந்து கொடுப்பதுதான் அவரது சேவையாக இருக்கிறது. காலையில் காய்கறி விற்பனை செய்யும் ஷாஜஹானின் சேவை தொடங்கிவிடுகிறது.

ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவி செய்யத் தொடங்கி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. யாரிடம் இருந்தும் பாராட்டுகளை எதிர்பார்ப்பதில்லை அவர். பிழைப்புக்கு காய்கறிக்கடை இருக்கிறது. இன்று பலருடையை உயிரையும் காப்பாற்றிய மனநிறைவில் இருக்கிறார் ஷாஜஹான்.

"ஒவ்வொரு நோயாளிக்கும் நிறைய யூனிட்டுகள் ரத்தம் தேவைப்படும். பல மைல் தூரங்களில் இருந்து வருபவர்கள். ஒரு நோட்டை வைத்துக்கொண்டு ரத்தம் யாராவது கொடுப்பார்களா என்று தேடிக்கொண்டிருப்பார்கள். எல்லா இடங்களில் இருந்தும் நான் ரத்தக் கொடையாளர்களின் முகவரியை சேகரிக்கிறேன்" என்கிறார் ஷாஜஹான், அட்டகுலங்காரா என்ற பகுதியில் மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன் வசித்துவருகிறார்.

சேவைக்குப் பாராட்டு 

அதிகாலை 3 மணிக்கு காய்கறி சந்தைக்குச் செல்லும் அவர் பத்து மணி வரை விற்பனையில் ஈடுபடுகிறார். பின்னர் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு ரத்தக் கொடையாளர்களைத் தேடும் சமூகப் பணியில் ஈடுபடுகிறார். சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி உதவுகிறார். ஷாஜஹானின் சேவையை புயலோ மழையோ கொரோனாவோ கட்டுப்படுத்தவில்லை. அவரது சேவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது