கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள கத்தோலிக்க பேராயர் பிராங்கோவிடம் 2வது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிராங்கோவிடம் நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை இன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சம்மனை ஏற்று, பிராங்கோ விசாரணைக்கு நேற்று ஆஜரானார். வைக்கம் துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான குற்றப்பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் பிராங்கோவிடம் விசாரணை நடத்தினர். நேற்றைய முதல்கட்ட விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளித்தாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னதாக, கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி பேராயர் பிரான்கோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை கேரள உயர்நீதிமன்றம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில் பேராயரை கைது செய்யக் கோரி கேரளாவில் நடந்து வரும் போராட்டம் 13வது நாளை எட்டியுள்ளது. நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கபப்ட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்டீபன் மேத்யூஸ் என்ற சமூக ஆர்வலர் மருத்துவமனையிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.