இந்தியா

‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’

‘மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்க இலக்கு’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற ‘நிஜ நாயகி’

webteam

கல்வி, பாதுகாப்பு இவற்றை வழங்குவதே தனது முதல் பணி என சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள மலைவாழ் பெண் தெரிவித்துள்ளார். 

அவருடன் செய்தியாளர் ஸ்டாலின் நிகழ்த்திய கலந்துரையாடலைப் பார்க்கலாம்.

கேரள மாநிலம் வயநாட்டின் மலைவாழ் பெண் ஸ்ரீதன்யா சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் தனது அனுபவங்களை புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார். அதன்படி புதிய தலைமுறை செய்தியாளர் எழுப்பிய கேள்விகளும், அதற்கு ஸ்ரீதான்யா அளித்த பதில்களையும் காண்போம்.

ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கும் போது உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது எது?

பொருளாதார நெருக்கடியே மிகப்பெரிய சவாலாக இருந்தது. வயநாட்டில் உள்ள மலைவாழ் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். 100 நாள் வேலைத்திட்டம் மட்டுமே எனக்கு வருவாயாக இருந்தது. தனிப்பட்ட முறையில் பலர் எனக்கு உதவி செய்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் வெற்றி பெற்ற தருணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் நீங்கள் சற்று ஏமாற்றமடைந்ததாக அறிந்தேன் அது ஏன்?

ஆமாம். தேர்வு முடிவுகள் எனக்கு ஏமாற்றம் அளித்தது. காரணம் நான் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வருவேன் என நினைத்திருந்தேன். ஆனால் 410வது இடத்தில் தேர்ச்சி பெற்றது சற்று வருத்தமளித்தது. பரவாயில்லை. நாட்டில் மிகவும் கடினமான தேர்வை எழுதி இந்த இடத்துக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

ஐஏஎஸ் தேர்வு எழுதும் மலைவாழ் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஐஏஎஸ் தேர்வு அனைவருக்கும்தான் என்பதை மலைவாழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவர்களுக்குத்தான் ஐஏஎஸ் தேர்வு என்று நினைக்க வேண்டாம். கடின உழைப்பு மற்றும் இலக்கை எட்ட வேண்டும் என்ற கடின மனநிலையே உங்களை வெற்றியாளராக்கும். இதுதான் எனது அட்வைஸ்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு பயிற்சி எடுக்க இருக்கிறீர்கள். உங்களின் விருப்பம் என்ன?

கண்டிப்பாக ஐஏஎஸ்தான். சிறுவயதில் எனது கனவாக அதுதான் இருந்தது. பணியில் சேர்ந்த பிறகு எனது கவனம் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கும். கல்வி வாயிலாகத்தான் உலகம் இயங்குகிறது. மலைவாழ் மக்களுக்கான முன்னேற்றம் மற்றும் மலைவாழ் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்க பாடுபடுவேன்.