கேரளா மாநிலம் ஆலுவா அருகே உள்ள ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அபீஸ் முகம்மது. 43 வயதான இவர் கொச்சியில் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி தனது 14 வயது மகளை இரும்பு ராடால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார். இதனை அடுத்து அவரது வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றி அவரை கொல்ல முயற்சித்துள்ளார். ஆனால் சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த விவகாரம் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையிடம் தெரிவித்த பின்பே வெளிஉலகிற்கும் தெரிய வந்துள்ளது.
இதுக்குறித்து காவல்துறையினர் கூறுகையில், மூன்று குழந்தைகளில் மூத்தவரான தனது மகள் பள்ளியில் உடன் படித்த மாற்று மதத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவருடன் பழகியது பிடிக்கவில்லை என்றும் தனது மகளை பலமுறை எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், உடன் படித்த மாணவருடன் சிறுமி தொலைபேசியில் பேசி வந்த நிலையில், அபீஸ் தொலைபேசியை உடைத்துள்ளார். ஆனால், மாணவியோ வேறு தொலைபேசியில் இருந்து பேசியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிறுமியைத் தாக்கி அவரை பூச்சிக்கொல்லி மருந்து குடிக்க கட்டாயப்படுத்திய நிலையில் அபீஸ் முகம்மதுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 342, 324, 326-A, 307, 75 போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிசு செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து அது தொடர்பான வழக்குகளும் சிறுமியின் தந்தை மீது பதியப்பட்டுள்ளது.