(கோப்பு புகைப்படம்)
கேரளாவில் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்றச்சொன்னதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஒருவர் அளித்த புகாரில்பேரில் நீட் மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று (ஜூலை17) நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கேரளாவில் சில மாணவிகள் மோசமான அனுபவங்களை சந்திருக்கின்றனர். நீட் தேர்வு விதிமுறைகளின்படி மெட்டல் பொருட்களை தேர்வறைக்குள் எடுத்துச்செல்லக்கூடாது. இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரிலுள்ள மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப நிறுவன மையத்திற்கு தேர்வு எழுதச்சென்ற ஒரு மாணவியை பரிசோதித்தபோது மெட்டல் டிடெக்டரில் பீப் சத்தம் கேட்டிருக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களே இருந்த நிலையில், உள்ளாடையிலுள்ள மெட்டக் ஹூக்கால்தான் சத்தம் வருகிறது என்று அந்த மாணவி எடுத்துக்கூறியிருக்கிறார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த கண்காணிப்பாளர் தேர்வு விதிமுறைகளின்படி பீப் சத்தம் வந்தால் உள்ளே விடமுடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். இதனால் அந்த மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் ஓடிவந்திருக்கிறார். இது ஒரு மாணவிக்கு மட்டுமல்ல; நேற்றைய நீட் தேர்வில் பலருக்கும் இதுபோன்ற மோசமான அனுபவம் கிடைத்திருக்கிறது. இதனால் பல மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பெற்றோர்கள் பலர் புகாரளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை கோபகுமார் சூரநாத் அளித்த புகாரில், ’’தேசிய சோதனை நிறுவனம் அளித்த வழிகாட்டு நெறிமுறைகளில் மெட்டல் ஹூக் உள்ள உள்ளாடைகளை அணிந்துவரக்கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. எனது மகள் உள்ளாடையை கழற்ற மறுத்தபோது, தேர்வு எழுத அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார். இந்த தேர்வுக்காக எனது மகள் நீண்ட நாட்கள் தயாராகியிருக்கிறாள். ஆனால் அவளால் தேர்வை சரியாகக்கூட எழுத முடியவில்லை. அவள் மன உளைச்சலுடன் அழுதுகொண்டே எங்களிடம் ஓடிவந்தாள். அவர்கள் மாணவிகளை கண்டிப்பாக உள்ளாடைகளை கழற்ற வற்புறுத்தியிருக்கின்றனர். இதனால் பல பெண்பிள்ளைகள் மிகுந்த அசௌகர்யத்திற்கு ஆளாகினர். அவர்களில் நிறையபேர் அழுதுகொண்டே சென்றனர். இதுதான் விதிமுறை என்றால், உள்ளாடைகளை மட்டும் சோதித்திருக்கலாம். அதை ஏன் கழற்ற செய்யவேண்டும்? இதுபோன்ற விதிமுறை நீட் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
குறிப்பாக, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அனைத்து மாணவிகளின் உள்ளாடைகளையும் ஒரே அறையில் வைக்க வற்புறுத்தியதாகவும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்று பிற மாணவிகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே போலீசில் புகார் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மார்த்தோமா தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ’’எங்களுடைய ஊழியர்கள் யாரும் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடவில்லை. விளக்கமளித்திருக்கிறது. தேசிய சோதனை நிறுவனத்தால் நியமிக்கப்பட்டிருந்த இரண்டு ஏஜென்சிகள் இந்த பயோமெட்ரிக் சோதனைகளில் ஈடுபட்டது. ஏஜென்சி சோதனை ஊழியர்களே இந்த சோதனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். எங்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. சில மாணவிகள் எங்களிடம் வந்து துப்பட்டா அணிந்துகொள்ள அனுமதி கேட்டு அழுதபோது நாங்கள் குறுக்கிட்டு அனுமதி அளித்தோம்’’ என்று கூறியிருக்கிறது.
ஆடைக்கட்டுப்பாடு என்ற பெயரில் அத்துமீறல் நடந்திருப்பதாகவும், இது அநாகரிகம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்திருந்தார். இந்நிலையில் இதுபோன்ற பல புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கேரள அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. கொல்லம் மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்போது நீட் மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.