இந்தியா

“ஒரு மாத சம்பளத்தை கொடுங்கள்”- உறவுகளுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்

“ஒரு மாத சம்பளத்தை கொடுங்கள்”- உறவுகளுக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்

rajakannan

கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் 10-க்கும் அதிகமான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். நிவாரண முகாம்களில் தங்கி இருந்த இவர்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். எனினும் இன்னும் ஏராளமானோர் முகாம்களில் தான் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணங்களை வாரி வழங்கி வருகின்றனர். பல்வேறு மாநிலங்கள் தங்களது நிவாரண நிதிகளை அறிவித்துள்ளனர். அதேபோல், சினிமா பிரபலங்கள், தனிநபர்கள், சிறுவர்கள், மீனவர்கள் என பலரும் தங்களது நிவாரண தொகையை அனுப்பி வருகின்றனர். நிவாரணப் பொருட்களையும் டன் கணக்கில் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்நிலையில், வெள்ள நிவாரண நிதிக்கு உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பதிவில், “உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் ஒற்றுமையுடன் இருந்தால், நாம் எத்தகைய தடையையும் வெற்றி கொள்ள முடியும். கேரள மாநிலத்தை மீண்டும் மறு கட்டமைப்பு செய்வதற்கு உலகம் முழுவது உள்ள மலையாளிகள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொடையாக கொடுக்க வேண்டும். 

எல்லோரும் ஒரே நேரத்தில் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொடுக்க முடியாது. நீங்கள் அதனை 10 மாத தவணையாக கொடுக்கலாம். மலையாளிகள் அல்லாதவர்களும் தங்களது ஆதரவை நல்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.