இந்தியா

’ரூ.500 பத்தாது ரூ.2000 கொடுங்க’-ராகுல் பயணத்திற்காக கடைக்காரரை மிரட்டிய காங். தொண்டர்கள்!

’ரூ.500 பத்தாது ரூ.2000 கொடுங்க’-ராகுல் பயணத்திற்காக கடைக்காரரை மிரட்டிய காங். தொண்டர்கள்!

webteam

ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்துக்கு நன்கொடை கொடுக்கவில்லை என்று கூறி, கேரளாவில் காய்கறிக் கடை உரிமையாளருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமைப் பயணத்துக்காக நிதி திரட்டுவதாகக் கூறி, கொல்லத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அங்குள்ள கடைகளில் நன்கொடை வசூலித்துள்ளனர். ஒரு காய்கறிக் கடையில் 500 ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த காங்கிரஸ் கட்சியினர், இரண்டாயிரம் ரூபாய் தருமாறு வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுத்ததாகவும், கடையிலிருந்த பொருள்களை கலைத்துப்போட்டதாகவும் அந்தக் கடை உரிமையாளர் ஃபவாஸ் (Fawaz) குற்றம் சாட்டி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று காங்கிரஸ் பிரமுகர்களைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது போன்ற செயலுக்கு கட்சி ஒரு போதும் மன்னிப்பு தராது என்றும் கட்சியின் கொள்கை இதுவல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.