கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்க நகைகளை தயாரித்து வினியோகம் செய்யும் நபர்கள் சென்ற காரை வழிமறித்த கொள்ளையர்கள், மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிவிட்டு 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆற்றிங்கல் பகுதியில் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர் சம்பத். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர், தனது கடையை மூடிவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரது கார், டெக்னோ சிட்டி பகுதியில் வரும்போது, மற்றொரு காரில் வந்த கொள்ளையர்கள் இவரது காரை தடுத்து நிறுத்தி மிளகாய் பொடியை இவர்மீது தூவியதோடு, கொள்ளையை தடுத்து நிறுத்த முயன்ற சம்பத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர், அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் அருண் மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரை தாக்கி விட்டு இவர்கள் கொண்டுவந்த 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தி சென்ற ஓட்டுனர் அருணை வாவறை பகுதியில் உள்ள ஆலயம் அருகில் தள்ளி விட்டும் சம்பத்தின் உறவினர் லக்ஷ்மணனை ஆற்றிங்கல் பகுதியிலும் இறக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பத் ஆற்றிங்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆற்றிங்கல் டிஎஸ்பி ஹரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.