பெங்களூருவில் ஒரு பூங்காவில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தன்னையும் தன் உடையைப் பற்றியும் கேலி செய்ததாக சமூக ஆர்வலர் கவிதா ரெட்டி மீது நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார் தெரிவித்திருந்தார். அதனை மறுத்துள்ள கவிதா ரெட்டி, அவர் மலிவான விளம்பரம் தேடுகிறவர் எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு அகாரா ஏரிக்கு அருகிலுள்ள பூங்காவில், தன் இரண்டு தோழிகளுடன் சேர்ந்து நடிகை சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கவிதா ரெட்டியும் மற்றவர்களும் அவரது உடைகளைப் பற்றி கேலியில் ஈடுபட்டதாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆவேசம் பொங்க புகார் செய்திருந்தார் சம்யுக்தா.
சமூகவெளியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்த இந்த சம்பவம் காவல்துறை வரை சென்றது. தன் மீதான புகாருக்கு விளக்கம் அளித்துள்ள கவிதா ரெட்டி, "இப்படி மூன்று பெண்கள் அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்கவிட்டு டான்ஸ் ஆடுகிறார்கள் என்று நடைப்பயிற்சி மேற்கொண்ட சிலரையும், அகாரா ஏரி பாதுகாப்புப் பணியாளரையும் அழைத்துச் சொன்னேன். எந்த பூங்காவிலும் இப்படி அனுமதிப்பதில்லை என்றேன். அப்போது வந்த பாதுகாப்புப் பணியாளர் அவர்களை அழைத்து சத்தமிட்டார். அப்போது அங்கு சென்ற நான் சம்யுக்தாவையும் அவரது தோழிகளையும் சந்தித்தேன்" என்கிறார்.
எந்த விதத்திலும் தான் சம்யுக்தாவின் உடையை விமர்சிக்கவில்லை என்று குறிப்பிடும் கவிதா ரெட்டி, "சம்யுக்தா மற்றும் அவரது இரு தோழிகளிடமும் பாதுகாப்புப் பணியாளர்களை வருத்தம் தெரிவிக்க வைத்தேன். ஆனால் அந்தப் பெண்கள் தங்களைத் திட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். பிறகு சம்யுக்தாவின் தோழிகளும் வருத்தம் தெரிவித்தனர் " என்று விவரித்துள்ளார் கவிதா.
"தினமும் நான் ஷார்ட்ஸ் அணிந்து நடைப்பயிற்சிக்குச் செல்கிறேன், அகாரா ஏரிக்கு வரும் பலர் எந்தவிதமான சீருடையோ அல்லது கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விரும்பியதை அணிந்து கொள்கிறார்கள் என்ற உண்மை இருக்கும்போது, நான் எப்படி உடையைப் பற்றி கிண்டல் செய்திருப்பேன், இது நகைப்புக்குரியது" என்றும் கவிதா ரெட்டி மனந்திறந்துப் பேசியுள்ளார்.