இந்தியா

உச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா..! - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு ?

உச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா..! - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு ?

webteam

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா ? என்ற நிலையில், அனைத்து முடிவுகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 15 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால், அரசு பெரும்பான்மை பலமின்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தை பயன்படுத்தி அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. இதற்கிடையே கடந்த 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தொடங்கியது. அன்றைய தினம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இருப்பினும் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

இதைக்கண்டித்து எதிர்க்கட்சித் தலைவரான எடியூரப்பா இரவு முழுக்க சட்டப்பேரவையில் தங்கினார். அடுத்த நாள் வாக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆளுநர் வஜ்ஜூபாஜ் லாலா கெடு விதித்தார். ஆனால் அன்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதற்கிடையே வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் விடுத்த கெடுவை எதிர்த்து முதலமைச்சர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்பதால், அதை எதிர்நொக்கி ஒட்டுமொத்த கர்நாடகாவும் காத்திருக்கிறது.