இந்தியா

சூட்கேஸில் பதுங்கிய காதலி.. உலறிகொட்டியதால் வார்டனிடம் வசமாக சிக்கிய காதலன்

சூட்கேஸில் பதுங்கிய காதலி.. உலறிகொட்டியதால் வார்டனிடம் வசமாக சிக்கிய காதலன்

Sinekadhara

காதலியை சூட்கேஸில் வைத்து மறைத்து தனது விடுதி அறைக்கு கொண்டுசெல்ல முற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவன் விடுதி காப்பாளரிடம் வசமாக சிக்கிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி இரவு கல்லூரி மாணவன் தனது விடுதிக்குள் பெரிய சூட்கேஸ் ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு இழுத்துவந்துள்ளார். சூட்கேஸ் வீங்கி இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் மாணவனை தடுத்து விசாரித்திருக்கிறார்.

கொஞ்சம் திறமையாக பேசியிருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் காப்பாளரை பார்த்தவுடன் சற்று அதிர்ந்த மாணவன், சூட்கேஸில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதாக மென்று விழுங்கி பதிலளிக்கவே காப்பாளரின் சந்தேகம் மேலும் அதிகரித்திருக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தால் விடுவேன் என காப்பாளர் அடம்பிடிக்க, ஒரு கட்டத்தில் வேறு வழியே இல்லாமல் சூட்கேஸை மாணவன் திறக்க, உள்ளே சுருண்டு படுத்திருந்த ஒரு பெண் வெளியா வர, அதைப் பார்த்த காப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது காதலி நன்றாக நடனம் ஆடுபவர் என்பதால் உடலை சூட்கேஸுக்குள் சுருட்டி படுத்துக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். மேலும் அந்த மாணவியும் அதே கல்லூரியில் பயின்று வருபவர்தான் என்பதும் விசாரித்ததில் தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து காப்பாளர் புகார் அளிக்கவே கல்லூரியிலிருந்து இருவரையும் சஸ்பெண்டு செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு சமயத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மங்களூருவில் 17 வயது மாணவன் தனிமையில் இருப்பதாகக்கூறி தனது நண்பன் ஒருவனை சூட்கேஸில் வைத்து அழைத்துவந்த சம்பவம் இணையதளங்களில் பரவி வைரலானது.