இந்தியா

தானியங்கி நீர் அளவிடும் கருவிக்கு கர்நாடகா எதிர்ப்பு?

தானியங்கி நீர் அளவிடும் கருவிக்கு கர்நாடகா எதிர்ப்பு?

webteam

கர்நாடகாவில் உள்ள அணைகளில் தானியங்கி நீர் அளவீடு செய்யும் கருவியை பொருத்த அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களை காவிரி ஒழுங்காற்று துணைக்குழு ஆய்வு செய்தது. தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் காவிரி ஒழுங்காற்று துணைக்குழு அளிக்கவுள்ளது. காவிரி பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை ஆன் லைன் மூலம் கண்காணிப்பதற்காக அவற்றில் தானியங்கி நீர் அளவிடும் கருவியை பொருத்தும்படி துணைக்குழு தனது அறிக்கையில் கூறவுள்ளது. 

தமிழகத்தில் மேட்டூர் அணையிலும், கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹேரங்கி, க‌பினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் தானியங்கி நீர் அளவிடும் கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அணைகளுக்கு வரும் நீரை கால்வாய்கள் மூலம் அம்மாநில அரசு வேறிடங்களுக்கு கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது. ‌

இதனால் அணைகள் நிரம்புவதில்லை என்றும், அதனை காரணம் காட்டியே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகா வழங்குவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே தானியங்கி நீர் அளவிடும் கருவி பொருத்திவிட்டால் இவ்வாறு செய்ய முடியாது என்பதற்காகவே கர்நாடகா அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.