இந்தியா

"கர்நாடகாவில் கொரோனா சமூகப் பரவலாக இருக்கிறது"- அமைச்சர் பேச்சால் சர்ச்சை !

"கர்நாடகாவில் கொரோனா சமூகப் பரவலாக இருக்கிறது"- அமைச்சர் பேச்சால் சர்ச்சை !

jagadeesh

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கிறது என்று அமைச்சர் மதுசாமி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இம்மாநிலத்தில் மட்டும் திங்கள்கிழமை 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, 30 பேர் உயிரிழந்தனர். இதுவரை கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 401 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அம்மாநில அமைச்சர் ஜே.சி.மதுசாமி "கொரோனா தொற்று காரணமாக தும்கூர் மாவட்ட மருத்துவமனையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் சமூகப்பரவலாக மாறிவிட்டது. இது மிகவும் கவலை தரும் விஷயமாக இருக்கிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "அரசு இயன்ற வரை கொரோனா பரவலை தடுப்பதற்கு பல முயற்சிகளை செய்தது. இப்போதும் செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இப்போது நிலைமை கைமீறி சென்றுக்கொண்டு இருக்கிறது" என வேதனையுடன் தெரிவித்துள்ளார் மதுசாமி.

அண்மையில்தான் கர்நாடக மாநிலத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் மதுசாமியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.