கர்நாடகாவில் கடந்த மாதம் 10ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. என்றபோதிலும் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட முதல்வர் பதவி யுத்தத்தினால் அக்கட்சி ஆட்சியமைக்க நாட்களைக் கடத்தியது.
அந்தச் சூழலில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். அதேநேரத்தில், டி.கே.சிவக்குமார் துணை முதல்வரானது குறித்து பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தமக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனதன் காரணம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “முதல்வர் பதவி நோக்கத்துடன் இருந்த எனக்கு, கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சில அறிவுரைகளை வழங்கினர். அதன்பின், அந்த இலக்கை கைவிட்டு விட்டேன். கட்சியின் தலைமைக்கு தலைவணங்க வேண்டியிருந்தது. அதனால், துணை முதல்வர் பதவியை ஏற்றேன். நான், முதல்வர் ஆவதற்காக நீங்கள் அதிக எண்ணிக்கையில் எனக்கு வாக்களித்து இருந்தீர்கள். ஆனால், கட்சியின் மேலிடம் ஒரு முடிவு எடுத்தது. மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்டேன்.
தற்போது, நான் பொறுமையாகவும் மற்றும் காத்திருக்கவும் வேண்டியுள்ளது. ஆனால், நீங்கள் விரும்பிய விஷயங்கள் வீணாய்ப் போகாது” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான் கர்நாடக முதலமைச்சராகும் ஆவலை வெளிப்படுத்தி உள்ளதுடன், அடுத்து அதற்கான வேலையில் இறங்க தயாராவது போன்ற தகவலையும் சூசகமுடன் தெரிவித்து உள்ளார் டி.கே.சிவக்குமார்.
இதையடுத்து, கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் யுத்தம் தொடங்கக்கூடும் எனப் பேசப்பட்டு வருகிறது.