தேஜஸ்வி சூர்யா ட்விட்டர்
இந்தியா

கர்நாடகா| கேள்வியெழுப்பிய பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்.. பாதியிலேயே வெளியேறிய பாஜக எம்.பி. தேஜஸ்வி!

பெங்களூருவில் கூட்டுறவு வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர்கள்மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Prakash J

நாடு முழுவதும் நடைபெற இருக்கும் 7 கட்ட தேர்தல் திருவிழாவில், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடங்க இருக்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அந்த மாநிலத்திலும் தீவிர பரப்புரையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பெங்களூருவில் கூட்டுறவு வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பெங்களூருவில் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூரு தெற்குத் தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா, பசவனக்குடி பாஜக எம்.எல்.ஏ ரவி சுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டுறவு வங்கிகளில் நிலவும் ஒட்டுமொத்த பிரச்னைக்கும் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ரவி சுப்பிரமணி தற்போது அதுகுறித்து பேசாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் குரல் எழுப்பி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வாடிக்கையாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தேஜஸ்வி, ரவி சுப்ரமணி ஆகிய இருவரும் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.

இதையும் படிக்க: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!