மாணவி தபசம் ஷேக்  ட்விட்டர்
இந்தியா

கர்நாடகா: ஹிஜாப் பிரச்சனைக்கிடையே மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த இஸ்லாமிய மாணவி!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கலைப்பிரிவைச் சேர்ந்த தபசம் ஷேக் என்ற இஸ்லாமிய மாணவி 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சங்கீதா

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் கடந்த ஆண்டு ஹிஜாப் மற்றும் காவித் துண்டு விவகாரம் பெரிதாக வெடித்தது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஏராளமான மாணவிகள் வகுப்புகள் மற்றும் தேர்வுகளைப் புறக்கணித்தனர். மேலும் இந்த விவகாரம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்றதோடு மட்டுமில்லாமல், நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹிஜாப் சர்ச்சைகளுக்கிடையே, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கலைப்பிரிவைச் சேர்ந்த தபசம் ஷேக் என்ற இஸ்லாமிய மாணவி 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

12-ம் வகுப்பு தேர்வுக்கு சமமான PUC-II (Second Pre-University) எனப்படும் இந்தத் தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த தபசம் ஷேக் என்ற மாணவி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “முதல் ஆண்டு சீராகவே சென்றது. ஆனால் ஆண்டின் இறுதியில், நிறைய சிரமங்களும், நிச்சயமற்ற தன்மைகளும் வந்துபோயின. ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து என்னால் கல்லூரியில் படிப்பை தொடர முடியவில்லை. அதேநேரத்தில் ஹிஜாப்பை அகற்றவும் தயக்கம் ஏற்பட்டது. எனினும், அது அப்போதைய சட்டம் என்பதால், அதனை பின்பற்ற வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மாணவி தபசம் ஷேக், அவரது பெற்றோர், சகோதரர்

மேலும் அவர் இந்தக் குழப்பத்தில் இருந்தபோது, ​​அவரது தந்தையும், எலக்ட்ரிக்கல் இன்ஜீனியருமான அப்துல் காம் ஷேக் மற்றும் தாய் பர்வீன் மோடி ஆகியோர் தன்னை அமரவைத்து பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ள தபசம் ஷேக், “ஹிஜாப் சர்ச்சை வெடித்தபோது, எனது மதம் மற்றும் கல்வி ஆகிய இரண்டில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருந்தேன். ஹிஜாப் அணிவது எனது அடையாளம் மற்றும் மதத்தின் ஒரு பகுதி. அப்படியிருக்கும்போது இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுவது, அதுவும் மதச்சார்பற்ற நாட்டில் நியாயமற்றதாக தனக்கு தோன்றியது. ஹிஜாப் விவகாரம் பெரிதாக வெடித்தபோது அந்த சமயத்தில் நான் கல்லூரிக்குச் செல்லவில்லை.

தனது பியூ கல்லூரியில் படித்த பல மாணவிகள் ஹிஜாப் விவகாரத்தால், கல்லூரியை விட்டு வெளியேறி, திறந்தநிலை பள்ளிகளில் சேர ஆரம்பித்தனர். ஆனால், எனது கல்வியைத் தொடர்வது முக்கியம் என்று எனது பெற்றோர் என்னிடம் விளக்கி கூறினர். கஷ்டப்பட்டு இப்போது படித்தால் இந்த அநீதிக்கு எதிராக ஏதாவது செய்ய முடியும் என்று அவர்கள் கூறினார்கள். முதன்முறையாக ஹிஜாப் அணியாமல் எனது கல்லூரிக்கு நான் சென்றேன். சங்கடமாக நான் இருப்பதை அறிந்த எனது நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்” என்று தபசம் ஷேக் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள NMKRV பியூ கல்லூரியில் படித்த மாணவி தபசம் ஷேக்குக்கு, ஆர்.வி. பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி துறையில் படிக்க அட்மிஷன் கிடைத்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அவர், உளவியல் படிப்பை படித்து மனநலம் தொடர்பான பணியை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், இளங்கலை முடித்து முதுகலைப் பட்டம் படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ உளவியலில் (clinical psychology) நிபுணத்துவம் பெற விரும்புவதாகவும் தபசம் ஷேக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் PUC-II தேர்வை எழுதிய 7,02,067 லட்சம் மாணவ, மாணவியர்களில், 5,24,209 பேர் அதாவது 74.67 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில், காமர்ஸ் பிரிவில் அனன்யா என்ற மாணவி 625 மதிப்பெண்களுக்கு 600 எடுத்து மாநில அளவில் முதலிடமும், எஸ்.எம்.கௌசிக் என்ற மாணவர் அறிவியல் பிரிவில் 600-க்கு 596 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், தபசம் ஷேக் கலைப்பிரிவில் 600-க்கு 593 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளனர்.