இந்தியா

”ஆட்டோவுல வந்த பலருக்கு கொரோனா பாஸிடிவ்” - கேரள ஆட்டோ ஓட்டுநரின் மகத்தான சேவை

”ஆட்டோவுல வந்த பலருக்கு கொரோனா பாஸிடிவ்” - கேரள ஆட்டோ ஓட்டுநரின் மகத்தான சேவை

webteam

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு தனது ஆட்டோவை தந்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரேமச்சந்திரன்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஊரடங்குக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு அரசு அனுமதியளித்தாலும், கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் இன்னமும் மக்களிடம் ஒரு நெருடல் இருக்கதான் செய்கிறது.

ஆனால் அந்த நெருடலை கருணை உள்ளம் எதிர்கொண்டு கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகளுடைய நோயாளிகளை தனது ஆட்டோ மூலம் மருத்துவமனைகளுக்கு நேரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார் கேரள மாநிலம், கண்ணூர் நகரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரேமச்சந்திரன். கண்ணூர் நகரத்தின் வெல்லூர் அருகே உள்ள பயன்னூர் பிரேமச்சந்திரனுக்கு சொந்த ஊர். கடந்த 15 மாதங்களாக இந்த உதவியை அவர் மக்களுக்கு வழங்கி வருகிறார்.

இது குறித்து 51 வயதான பிரேமச்சந்திரன் கூறும் போது, “ கடந்த 15 மாதங்களாக நான் இத செஞ்சிட்டு வரேன். பயன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா அறிகுறிகள் கொண்ட பல பேரை நான் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துருக்கேன். என் ஆட்டோல கொரோனா அறிகுறிகளோட பயணம் செஞ்ச பல பேருக்கு கொரோனா உறுதியாகிருக்கு. சிலருக்கு நெகட்டிவ்வும் வந்துருக்கு. ஆட்டோவில் வந்த நபருக்கு கொரோனா பாஸிட்டிவ்னு தெரிஞ்சதும் ஆட்டோவ சானிடைசர் போட்டு க்ளீன் பண்ணிருவேன். ஏழை மக்கள்தான் என்னைத் தேடி வராங்க. கொரோனா பரவலுக்கு பயந்து பல ஆட்டோ ட்ரைவர்ஸ் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திட்டாங்க. என்னை பொருத்தவரை அது நியாமானது இல்லை.”என்றார்.