இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகோய்

webteam

உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் நீதிபதி ரஞ்சன் கோகோய்.

நாட்டின் 46-வது தலமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி ஏற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்ஜன் கோகாயை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். தீபக் மிஸ்ராவின் பரிந்துரையைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் படி, இன்று ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் 17ம் தேதி வரை உள்ளது.மேலும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.