இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு: நீதிபதி வேதனை

நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு: நீதிபதி வேதனை

rajakannan

நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கவலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 22 நீதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மார்ச் 21ஆம் தேதியிட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்ட பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில் செலக்டீவ்-ஆக மத்திய அரசு செயல்படுகிறது. கொலீஜியம் பரிந்துரை செய்யும் பெயரை நிராகரிக்கிறது அல்லது ஏற்றுக் கொள்ளாமல் ஒத்தி வைக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு எதிராக மக்களவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர 100 எம்.பி.க்கள் ஆதரவும் மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் ஆதரவும் தேவை. “தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்தில் தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளனர்” என்ற தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரிபாதி கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுகிறார் என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பீமாராவ் லோகூர் ஆகியோர் 2 மாதங்களுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.