நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் விசாரணை தொடங்கியது.
6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோன நிலையில், டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த டிசம்பர் 5-ந் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.