இந்தியா

"பேஸ்புக் லைவ்" செய்து தற்கொலைக்கு முயன்ற மேற்குவங்க இளம் நடிகர் - காப்பாற்றிய காவல்துறை

"பேஸ்புக் லைவ்" செய்து தற்கொலைக்கு முயன்ற மேற்குவங்க இளம் நடிகர் - காப்பாற்றிய காவல்துறை

jagadeesh

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பேஸ்புக்கில் லைவ் செய்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நாடக நடிகர் ஒருவரை போலீஸார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்த அந்த இளம் நடிகர் தற்கொலை முடிவெடுத்தவுடன் பேஸ்புக்கில் அதனை லைவ் செய்துள்ளார். அந்க 10 நிமிட வீடியோவில் அந்த நபர் பின்னணியில் இசையோட கிடாரை வாசித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் திடீரென "நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்" என பேச தொடங்குகிறார்.

அந்த வீடியோ பதிவில் "ஒவ்வொரு வீட்டிலும் பிரச்னை இருப்பது எனக்கு தெரியும். 31 வயதில் வேலை இல்லாமல் இருக்கிறேன். அது என் தாயாருக்கு கவலையாக இருக்கும். என் தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இப்போது அவரின் ஓய்வூதியத்தில்தான் என் குடும்பம் நடந்துக்கொண்டு இருக்கிறது. நான் மன உளைச்சலில் இருக்கிறேன், எனக்கு வாழவே பிடிக்கவில்லை நான் இப்போது தூக்க மாத்திரையை மெல்ல விழுங்கிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு மற்ற வழிகளில் தற்கொலை செய்ய விருப்பமில்லை. அதான் தூக்க மாத்திரையை தேர்வு செய்தேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை நேரலை குறித்து சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஜிபிஎஸ் மூலம் அந்த இளைஞரின் இருப்பிடத்தை தெரிந்துக்கொண்ட கொல்கத்தா போலீஸார் நேராக அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சை்ககாக அனுப்பி வைத்தனர்.

கவனத்துக்கு...

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)