இந்தியா

"காவல்துறை விசாரணை போலியானது" - ஜே.என்.யூ மாணவ அமைப்பு குற்றச்சாட்டு

"காவல்துறை விசாரணை போலியானது" - ஜே.என்.யூ மாணவ அமைப்பு குற்றச்சாட்டு

webteam

ஜே.‌என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் டெல்லி காவல்துறையினர் நடத்தும் விசாரணை போலியானது என பல்கலைக்கழக மா‌ணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி இரவு டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். முகமூடிகளை அணிந்து வந்த மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக, அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்சி கோஷ் தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதலின் போது மாணவர்கள் பதற்றத்தில் திசை அறியாமல் சீதறி ஓடிய காட்சி பார்ப்பவர்களை பதற வைத்தது. அதனை அடுத்து இந்தத் தாக்குதலை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்தனர். டிவிங்கிள் கண்ணா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல திரைத்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், பல்கலைக்கழகத்தில் ஒரு கும்பல் சுற்றிவருவதாக காவல்துறையி‌னருக்கு தகவல் அனுப்பியும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை எனக் கூறினர்.

தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏபிவிபி அமைப்பின் சந்திப்பாகவே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தாக்குதல் நிகழ்ந்த அன்று, 'இடதுசாரிக்கு எதிரான ஒற்றுமை'‌ என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்‌கப்பட்டதா‌கவும் அதிலிருந்த மாணவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.