இந்தியா

ஜார்க்கண்ட்டில் ஓர் கூவத்தூர் கலாட்டா.. 3 பேருந்துகளில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஹேமந்த்!

ஜார்க்கண்ட்டில் ஓர் கூவத்தூர் கலாட்டா.. 3 பேருந்துகளில் எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஹேமந்த்!

webteam

ஆட்சியை தக்க வைக்க எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார்.

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் தன் பதவியைப் பயன்படுத்தி சுரங்க உரிமத்தைச் சட்டவிரோதமாகப் பெற்றதாகவும், இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க புகார் அளித்திருந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஹேமந்த் சோரன் மீதான முறைகேடுப் புகார் உறுதியானதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்வரை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் 3 சொகுசு பேருந்துகள் மூலம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-கள் இடம் சொல்லப்படாத இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதலில் நட்பு மாநிலங்களான மேற்குவங்க மாநிலத்திற்கு அனுப்பலாம் என சொல்லப்பட்டது. ஆனால் ஹேமந்த் சோரன் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதால் அவர்கள் ஆளும் மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு எம்.எல்.ஏ-களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இன்று பிற்பகலுக்கு மேல் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ஆளுநர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், எம்.எல்.ஏ-க்கள் வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.