எருமை மாடுகள் pt web
இந்தியா

ஜார்க்கண்ட்: எருமை மாட்டின் மீது பைக்கில் மோதிய சிறுவன்; உரிமையாளர்கள் தாக்கியதில் பலி

எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிளில் மோதிய சிறுவனை, எருமைமாட்டின் உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் சந்தாலி தோலாவில் உள்ள குர்மஹாட்டில் வசிக்கும் 16 வயது சிறுவன், தனது 3 நண்பர்களுடன் கால்பந்தாட்ட போட்டியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.

ஹன்ஸ்திஹா காவல்நிலையப் பகுதியின் அருகே தாதி எனும் கிராமத்தில் சிறுவன் வந்த மோட்டார் சைக்கிள் எருமை மாட்டின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்களுக்கும் எருமை மாடுகளின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து காவல் அதிகாரி அமோத் நாராயண் சிங் கூறுகையில், “சிறுவன் எருமை மாட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு தர ஒப்புக்கொண்டுள்ளார். இருந்தபோதிலும் 4 நபர்கள் சிறுவனைத் தாக்கியுள்ளனர். அப்போது சிறுவனது நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்” என்றுள்ளார். இச்சம்பவத்தில் அடிதடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் சரியாஹட்டில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனைத் தாக்கியவர்களை கைது செய்யக்கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்களை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.