இந்தியா

பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்: பீகாரில் அதிரடி

பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்: பீகாரில் அதிரடி

webteam

நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவையில் நேற்று புதிய சட்ட முன் வடிவு ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதில் வயதான பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலான சட்ட முன்வரைவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


 

கைவிடப்படும் பெற்றோரின் மகளோ, மகனோ யாராக இருந்தாலும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனை பெறுவதற்கான சட்ட முன்வரைவிற்கு பீகார் அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தன்னலமின்றி பெற்றோர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் சுயநலத்தால் பெற்ற தாயையும், தந்தையை கைவிடும் அவலம் நீடித்துக்கொண்டே செல்கிறது. பெற்ற பிள்ளைகளின் நலனுக்காக அநேக தியாகங்களை செய்த பெற்றோர்களை மறந்து திருமணமான பிறகு பிள்ளைகளால் அநாதையாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டே இந்த சட்ட
முன்வரைவிற்கு பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தன்னுடைய சொந்த பிள்ளைகளால் கைவிடப்படும் மற்றும் பாதிக்கப்படும் பெற்றோர்கள் முன் வந்துபுகார் அளித்தால், அவர்களின் பிள்ளைகள் மீது உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் வயதான பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் ஒழுங்காக கவனிக்க வழிவகை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.