நடப்பு உலகக்கோப்பையை, இந்தியா தவறவிட்டதே, அனைவரின் பேச்சாக இருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதில் அரசியலும் கலந்திருப்பதுதான் வேதனையாக உள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததுடன், அவ்வணியிடம் இரண்டாவது முறையாக கோப்பையைத் தாரைவார்த்தது. இதனால் இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ”இந்திரா காந்தி பிறந்தநாளில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடத்தப்பட்டதால்தான் நமது அணி தோற்றது” என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”அன்றைய தினம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக்கோப்பை போட்டி நடந்தது. ஒவ்வோர் ஆட்டத்திலும் நாம் வெற்றி பெற்றோம். ஆனால், இறுதிப் போட்டியில் தோற்றோம். பிறகு வந்து யோசித்துப் பார்த்தேன். அந்த நாள் என்ன, ஏன் தோற்றோம் என தீவிரமாக சிந்தித்தேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான அந்த நாளில்தான் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்ததை கண்டறிந்தேன். அதனால், நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று தெரிந்தது” எனத் தெரிவித்துள்ளார். அசாம் முதல்வரின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், இதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தற்போது காங்கிரஸை, பாஜக உள்ளுக்குள் இழுத்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.
அதுபோல் இந்திய அணியின் தோல்வி குறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம், பிரதமர் மோடியை மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார். அவர், “உலகக்கோப்பை தொடரில் முதல் 10 ஆட்டங்களில் வெற்றிபெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பாவம் செய்த ஒருவர், அப்போட்டியை காண வந்ததுதான் காரணம்” எனத் தெரிவித்திருந்தார்.