இந்தியா

புதுச்சேரி: நமச்சிவாயத்திற்காக துணை முதல்வர் பதவி உருவாக்கமா?

புதுச்சேரி: நமச்சிவாயத்திற்காக துணை முதல்வர் பதவி உருவாக்கமா?

JustinDurai

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நமச்சிவாயம் துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த நமச்சிவாயம் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார். ஆனால், இறுதிக் கட்டத்தில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானதால், அதிருப்தி அடைந்த நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவரை தொடர்ந்து மேலும் சில எம்எல்ஏக்களும் காங்கிரஸில் இருந்து விலகியதால், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நமச்சிவாயம் வகுத்த வியூகம் காரணமாகவே பாரதிய ஜனதா 6 இடங்களில் வென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பாரதிய ஜனதாவினர் எதிர்பார்த்த நிலையில், கூட்டணி கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அப்பதவியை விட்டு தர சம்மதிக்கவில்லை.

இதனால், புதுச்சேரியில் யார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இரு கட்சி பிரமுகர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு எட்டப்பட்டதால், ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது ரங்கசாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை பாரதிய ஜனதா சட்டப்பேரவை உறுப்பினர்களும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து நமச்சிவாயத்தை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்காக துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களுக்கு பதிலாக 6 அமைச்சர்களை நியமிப்பதற்கான அனுமதியை பெற உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தரப்பில் இருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடைமுறைகள் முடிந்த பின் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் தெரியவந்துள்ளது.