இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, அக்டோபர் முதல் வாரத்தில் கொழும்பு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு இந்தியா - இலங்கை பங்களிப்பில் உருவான புதிய திட்டங்களை தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தினை ஒட்டி இந்திய-இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய நிலையில், இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அண்மைக்காலமாக இலங்கை சீனாவோடு நெருக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்திய உதவியோடு இலங்கையில் நடைபெற்று வரும் திட்டங்களின் பணிகள் உரிய வேகத்தில் நடைபெறாதது குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த போருக்குப் பிந்தைய தமிழ் மக்களின் கவலைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை செயலரின் இலங்கை பயணத்தின் போது இவ்விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.