மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனை பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர் குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி தலைவர் வெயிலா கே.ராஜா, இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர் குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இநோவேஷன் கூடுதல் முதன்மை செயல் அலுவலர் சிவராஜு இணைய தளம் வாயிலாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீர் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குண்டான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான திட்ட அறிக்கைகள் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
மேலும், ”முன்னதாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் பணிகள் தொடங்கப்படும் போது சிறு குறு நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்பும் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
உதாரணத்திற்கு கட்டுமான பணிகளின்போது தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, போக்குவரத்து, இருப்பிடம், மின்சாரம் என அனைத்து வகைகளிலும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். இதை தொடர்ந்து, கட்டுமான பணிகள் முடிந்த பின்னே ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தாலும் நிர்வாகம், பராமரிப்பு, பணியாளர்கள் என இங்கு உள்ள பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என்றார்.
மேற்கொண்டு பேசிய அவர், ”இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் வெறுமனே நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் அல்ல இப்பகுதியில் தொழில் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் 900 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே ராக்கெட் ஏவுதளம் குறித்து திட்ட அறிக்கைகள் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமான வேலைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ககன்யான் திட்டம் குறித்து பேசுகையில், “ககன்யான் திட்டம் இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று. அதன்படி திட்டத்துக்கான பரிச்சார்த்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நிலை சோதனைகள் செய்ய வேண்டி உள்ளது. முதற்கட்டமாக முதல் நிலை சோதனைக்கு தேவையான விஷயங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. விண்வெளி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றங்களை கண்டு வருகிறது. ககன்யான் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தும் போது விண்வெளி துறையில் இந்தியா சீரிய நிலைக்கு வரும். இந்தியாவை விண்வெளி துறையில் முன்னணியில் நிறுத்துவதற்கான பணிகளும் வழி திட்டங்களும் இஸ்ரோ தலைவரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் ககன்யான் திட்ட நிலை குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்றார்.