இந்தியா

தேஜஸ்வி வெளியிட்ட வீடியோ மட்டும்தான் காரணமா? - பீகார் அமைச்சர் ராஜினாமா பின்னணி

தேஜஸ்வி வெளியிட்ட வீடியோ மட்டும்தான் காரணமா? - பீகார் அமைச்சர் ராஜினாமா பின்னணி

webteam

பீகார் அமைச்சர் ராஜினாமா பின்னணிக் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம். 

 பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மேவாலால் சவுத்ரி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற 3 வது நாளில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். "சவுத்ரி தேசிய கீதத்தையும் சரியாகப் பாடவில்லை" என்று ராஜினாமாவுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி வெளியிட்ட வீடியோதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், அதுமட்டும் காரணமில்லை என்று அதிர்ச்சி கொடுக்கின்றன, பீகார் ஊடகங்கள். தேசிய கீதம் தெரியாத அளவுக்கு மேவாலால் ஒன்றும் படிக்காதவர் கிடையாது. சபூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் இந்த மேவாலால் சவுத்ரி.

இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது, உதவி ஆசிரியர் மற்றும் ஜூனியர் விஞ்ஞானி நியமனம் மற்றும் பல்கலைக்கழகக் கட்டுமானத்தில் மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு இருக்கிறது. சபூர் காவல் நிலையத்தில் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தற்போது உயர் நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு இப்போது வந்ததல்ல. 2015-ல் நிதீஷ் முதல்வராக இருந்தபோதே எழுந்தது. ஒருமுறை, சிறையில் இருக்கும் ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவ், மோசடி நியமனம் தொடர்பாக பாஜக மற்றும் ஜேடியுவையும் குறிவைத்து "மேவலால் சவுத்ரியைத் தேடியவர்கள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள்" என்று அதிரடியாக கடிதம் எழுதியிருந்தார்.

அதன்பின் 2017-ல் ஜே.டி.யுவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சவுத்ரி பின்னர் சில மாதங்களுக்கு பின் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால், 2017-ல் அப்போதைய பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஒப்புதலின் பேரில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் நியமனங்களில் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இருப்பினும், அவர் மீது குற்றப்பத்திரிகை இன்னும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான் அவர் மீண்டும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட விவகாரம் வலுவானது. குறிப்பாக, தேஜஸ்வி யாதவ் சவுத்ரி விவகாரத்தை முன்வைத்து நிதீஷுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்." சவுத்ரிமீது ஐபிசி 420 பிரிவில் வழக்குகள் உள்ளன. இதற்காக ஜாமீனும் பெற்றுருக்கிறார். மேலும், ஊழலுக்காக சவுத்ரியை தன் கட்சியிலிருந்தும் 2017இல் இடைநீக்கம் செய்தார் நிதீஷ். இதைவிட அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வரலாறும் இருக்கிறது.

அப்படிப்பட்டவரை கல்வி அமைச்சராக அமர்த்துவது அவமானம் இல்லையா நிதிஷ்ஜி? இதன்மூலம் புரிவது என்னவென்றால், கல்வித் துறையிலும் ஊழல் புரிய சவுத்ரிக்கு நிதீஷ் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அமைச்சராக்கப்படவில்லை. இவரைப் போன்றவர்களை அமைச்சர் ஆக்குவதற்கு அவர்களில் யாரையாவது அமைச்சர் ஆக்கலாம்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஊழல் வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில் அது நிதீஷ் அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இதையெல்லாம் புரிந்துதான் சவுத்ரி ராஜினாமா செய்திருக்கலாம் என்று பீகார் ஊடகங்கள் கூறியுள்ளன.

சவுத்ரியின் மனைவி சாவிலும் மர்மம்!

மேவலால் சவுத்ரியின் பெயர் அவரது மனைவியின் மரணத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. டாக்டர் மேவலால் சவுத்ரி அமைச்சராக பதவியேற்றவுடன், அவரது மனைவி நீதா சவுத்ரியின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மேவலாலின் மனைவி நிதா சவுத்ரி 2010 முதல் 2015 வரை தாராப்பூரிலிருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தவர். 2019ல் எல்பிஜி சிலிண்டல் வெடிவிபத்தில் சிக்கி சிகிச்சையின்போது இறந்தார். இந்த மரணத்தில் மேவலால் சவுத்ரிக்கும் பங்கு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை கூறியிருப்பவர் பீகாரின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அமிதாப் தாஸ். மேவலால் அமைச்சரானதும், தனது சமூக வலைதள பக்கத்தில், "அவரது மனைவி நீதா சவுத்ரியின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். மனைவியின் மரணத்தில் அவரை டிஜிபி விசாரிக்க வேண்டும்" என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அமிதாப் தாஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.