பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு INDIA என பெயர் வைத்ததில் இருந்தே ஆளும் தரப்பினர் ‘பாரத்’ வார்த்தையை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்தனர். அதேபோல் எதிர்கட்சிகளை விமர்சிக்க அந்த கூட்டணியை காமாண்டியா கூட்டணி என்றும் விமர்சித்தனர்.
அதேசமயம் இந்தியாவில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளின் உலகத் தலைவர்களும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மாநிலங்களின் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் பாரத் குடியரசு என குறிப்பிட்டு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ட்விட்டரில் பதிவிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நமது நாகரீகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறது” என்றும் அசாம் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாரதம் என குறிப்பிட்டுள்ளார். இதுவும் சர்ச்சையாக வருகிறது. தன்னுடைய ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் “திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார் அவர்.