ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அங்குள்ள இந்தியர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக ஈரான் அரசுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானிலுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவருக்கு ட்விட்டர் மூலம் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு தென் கொரியா. அங்கு 1,595 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 24 மணி நேரத்தில் 334 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா திடீரென இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவது கவலையளிப்பதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே அண்டார்டிகா கண்டத்தை தவிர அனைத்து கண்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.