இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இலங்கையில் ஈஸ்டர் திருவிழாவின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், சில குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து இலங்கை உஷார் நிலையில் உள்ளது. இலங்கை தாக்குதலை அடுத்து அண்டை நாடான இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஜெய்ஸ் இ முகமது மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனையடுத்து பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியாவில் மற்றொரு தாக்குதலை நடத்த ஜெய்ஸ் இ முகமது தலைவர் மசூத் அசார் திட்டமிட்டிருப்பதாகவும், சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம், தீவிரவாத அமைப்புகள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.