விண்வெளியிலும் வெவ்வெறு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், விண்வெளிக்குச் சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகிறார்.
இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் விமானியுமான கோபிசந்த் தொட்டகுரா என்பவர், இந்த முறை பயணிக்க இருக்கிறார். இவருடன் மேசன் ஏஞ்சல், சில்வைன் சிரோன், கென்னத் எல்.ஹெஸ், கரோல் ஷாலர், முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட் ஆகியோரும் பயணிக்க உள்ளனர். இதற்கான பயண தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1984-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்டுவந்த ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். அவருக்கு அடுத்து, விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபிசந்த் தொட்டகுரா பெற உள்ளார்.
இதுகுறித்து கோபிசந்த் தொடகுரா, ”விண்வெளிக்கு அப்பால் உள்ள விசயங்களை அறிந்துகொள்வதற்காக அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்காகவே இந்த பயணம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த கோபி தொட்டகுரா, ஏரோநாட்டிகல் பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தவர். ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைந்துள்ள உடல்நல மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரிசர்வ் லைஃப் கார்ப்பரேசன் என்ற சர்வதேச மையத்தின் துணை நிறுவனராக உள்ளார்.
ஜெட் விமானங்ள் மட்டுமின்றி, சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்ல கூடிய விமானங்கள், கிளைடர் வகை விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் அவர் விமானியாகச் செயல்பட்டு இருக்கிறார். சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாகவும் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் தான்சானியாவில் உள்ள மவுண்ட் கிளிமாஞ்சாரோவுக்கு சென்றது இவரது சாதனையாக உள்ளது.