வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு ரயில்களில் சலுகை கட்டணத்தில் நிவாரண பொருட்களை அனுப்ப ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அரசும், தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. அந்தந்த மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நிவாரண பொருள்களை அனுப்பி வைக்கின்றனர்.
இந்தப் பொருட்களை ரயில்களில் அனுப்பினால், சலுகை விலையில் அவற்றை கொண்டு சேர்க்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து ரயில்வேதுறை பொதுமேலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் நிவாரணப் பொருட்களை சரக்கு ரயில்களிலும் பயணிகள் ரயில்களின் மூலமும் அனுப்பலாம் என்றும், இந்தப் பொருட்களுக்கு போக்குவரத்து கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுமென்றும், வேறு எந்தவித துணை கட்டணமும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்த மாதம் 31ஆம் தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என ரயில்வே துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.