ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்திலிருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ரயிலில் செல்லும் பெண் பயணிகள், குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின்போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.
பயணத்தின்போது பிரச்னை எதுவும் ஏற்பட்டால் 182 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கோரலாம். இது போன்றவர்களுக்கு விரைந்து உதவி வழங்கப்படுவதுடன் இந்த நடைமுறை சரியாக அனுசரிக்கப்படுகிறதா என மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பர். இத்திட்டத்தின் கீழ் பெண் பயணிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். தென்கிழக்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பெண் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்ததால் இது நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது”என்று ரயில்வே தெரிவித்துள்ளது.