நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணையாக ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில்களையும் மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில்களில் உணவு, கழிவறை உள்ளிட்டவை மிக மோசமாக இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 லட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொரு ரயிலும் மேம்படுத்தப்படவுள்ளது. உள்கட்டமைப்பு, சமையல், சுகாதாரம், ஊழியர்களின் நடத்தை, பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்தக்குழு விரிவாக ஆய்வு செய்து, வரும் 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில்களை மேம்படுத்தும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரைவு ரயில்களில் எல்.சி.டி. திரை, வைஃபை வசதி உள்ளிட்டவற்றையும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.