இந்தியா

இன்று கரையை தொடும் 'ஜாவத்' புயல்: கனமழைக்கு வாய்ப்பு

இன்று கரையை தொடும் 'ஜாவத்' புயல்: கனமழைக்கு வாய்ப்பு

JustinDurai
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இன்று காலை கரையை தொட்டு, மீண்டும் திசைமாறி ஒடிசாவின் புரியை நோக்கி செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 3ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நண்பகலில் அது புயலாக தீவிரமடைந்தது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா அரசு ஜாவத் என பெயர் சூட்டியுள்ளது. ஜாவத் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை தொடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அது சற்று திசைமாறி வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவின் புரியை நோக்கி செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஜாவத் புயல் காரணமாக வடக்கு கரையோர ஆந்திரா, தெற்கு கரையோர ஓடிசா பகுதிகளில் மிக கன மழை பெய்யும் என்றும், இன்று காலை மேலும் மழை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஜாவாத் புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும், ஒடிசாவின் கஜபட்டி, கஞ்சம், புரி, ஜெகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் இயக்கப்படும் சுமார் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜாவத் புயல் காரணமாக பாம்பன், கடலூர், நாகை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.