இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திறம்பட வழிநடத்தியவர் கேப்டன் ரஹானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் கோலி இல்லாத சமயங்களில் கேப்டனாக வழிநடத்துவது வழக்கம். மெல்போர்ன், சிட்னி மற்றும் காபா என மூன்று மைதானங்களில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தியதோடு 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்ற உதவியுள்ளார் ரஹானே. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிக் கோப்பையுடன் வியாழன் அன்று நாடு திரும்பிய அவருக்கு மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பக்கத்தில் வாழும் அக்கம் பக்கத்தினர் தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஆரவாரமாக அனைவரும் ரஹானேவை வரவேற்றதோடு அவருக்கென கேக் ஒன்றையும் தயார் செய்து வைத்திருந்துள்ளனர். அந்த கேக்கை வெட்ட சென்றபோது தான் அதில் கங்காரு பொம்மை வடிவில் பொம்மை ஒன்று இருந்ததை ரஹானே பார்த்துள்ளார். உடனடியாக அந்த கேக்கை வெட்டவும் மறுத்துள்ளார் ரஹானே. அது மராத்தி மொழி சேனல்களில் பிளாஷ் நியூஸாக வெளியாகியுள்ளன. அது குறித்து ட்விட்டரிலும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கங்காரு ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய விலங்காகும். சமயங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை கங்காருவுடன் ஒப்பிடுவது உண்டு. அதனால் கங்காரு உள்ள கேக்கை வெட்டினால் அது ஆஸ்திரேலியாவை நாம் அவமானப்படுத்துவதற்கு சமம் என்பதால் அந்த கேக்கை வெட்ட மறுத்துள்ளார் ரஹானே. அவர் விளையாடும் விளையாட்டு மட்டுமல்ல அவரும் ஒரு ஜென்டில்மேன் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.
நன்றி : TV9MARATHI