ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம்ஐஜி - 27 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. போர் விமானத்தின் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பாரசூட் மூலம் உயிர்தப்பினார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உத்தர்லாய் என்ற இடத்தில் இந்திய விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அங்கிருந்து, எம்ஐஜி-27 ரக போர் விமானம், வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது. இந்தப் பயிற்சியின்போது, விமானம் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் தரையை நோக்கி பாய்ந்தது. சிரோகி மாவட்டத்தில் கொடானா என்ற கிராமத்தின் அருகே திறந்தவெளியில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இதனிடையே, அதன் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, பாரசூட்டின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து உயிர்தப்பினார். போர் விமானம் வெடித்துச் சிதறியதற்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த ஆண்டில் பயிற்சியின்போது விபத்துக்குள்ளான போர் விமானங்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.