ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் உரையாடிய போது, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதனை வரும் தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையிலும் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் அகற்றம் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்.
இந்நிலையில், பருவநிலை மாற்றம் தொடர்பாக டெல்லியை அடுத்த நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்தியா எடுத்துள்ள முடிவை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அவர் அழைப்புவிடுத்தார்.
மேலும், “பருவநிலை மாற்றத்தால் உலகம் மோசமான பாதிப்பை அடைந்துவருகிறது. அதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க இயக்கம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது” என்று அவர் பேசியுள்ளார்.