பாகிஸ்தானில் உள்ள ஜெயிஷ்- இ- முகம்மது பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதல் திட்டங்களை முடித்துக்கொள்வதாகவும், இனி அந்த அமைப்பை சர்வதேச அளவில் தடை செய்யும் முயற்சியை இந்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமாவில் துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப் படையினர் பால்கோட் பகுதியிலிருந்த ஜெயிஷ்- இ- முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஜெயிஷ்- இ- முகம்மது பயங்கரவாத அமைப்பு மீதான ராணுவ நடவடிக்கைகளை முடித்துக் கொள்வது என இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் ஜெயிஷ்- இ- முகம்மது அமைப்பையும், அதன் தலைவர் மசூத் அசாரையும் சர்வேதச அளவில் தடை செய்வதற்கான முயற்சிகளை இந்திய அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக மார்ச் 13 ஆம் தேதி நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில், ஜெயிஷ்- இ- முகம்மது அமைப்பை மீது நடவடிக்கை எடுப்பதற்கு உலக நாடுகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஜெயிஷ்- இ- முகம்மது அமைப்பு மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
மேலும், லக்ஷர் - இ- தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகம்மது சையத்துக்கும் தடை விதிப்பதற்கு இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. மசூத் அசாருக்கு தடைவிதிக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் முயற்சிக்கு இந்த முறை சீனா தடை ஏற்படுத்தாது என்ற தகவலும் இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
மசூத் அசாருக்கு தடை விதிக்கும் முயற்சிக்கு சீனா ஏற்கனவே 3 முறை முட்டுக்கட்டை ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தடை விதித்தால் மசூத் அசார், ஹபீஸ் முகமது ஆகியோர் பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் உருவெடுக்கும். பல்வேறு நாடுகளிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் நிதிக்கும் தடுப்பு போடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.